முல்லைத்தீவில் பாரிய சிங்கள குடியேற்றத்துக்குத் திட்டம்!
27 Mar,2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று வட மாகாணசபையில் தெரிவித்தார். இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக விசேட அமர்வு ஒன்று சித்திரை 5ம் திகதி நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று வட மாகாணசபையில் தெரிவித்தார். இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக விசேட அமர்வு ஒன்று சித்திரை 5ம் திகதி நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் நடந்த வடமாகாணசபையின் 119வது அமர்வில், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாயபுர சிங்கள குடியேற்றம் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சபைக்கு சமர்ப்பித்தார். இதன்போது அவர், “மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. இதனால் பெரும் பாதிப்பு உண்டாகப்போவதாக சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில்,இந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில்,மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஒரு தடவை இது தொடர்பாக பேசும்போது மாகாணசபை உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனாலும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை. இந்நிலையில் இந்த மாயபுர என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்தவேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி அவர்களும் மத்தியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கமைய விசேட அமர்வு ஒன்றை எதிர்வரும் சித்திரை மாதம் 5ம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.