ஆழ் கடலில் மூழ்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்!video
26 Mar,2018
ஆழ் கடலில் மூழ்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்!
இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்ட வேலின் என்ற கப்பல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஏற்றி வர பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான இந்த கப்பலை கடற்படையினர் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வந்தனர். இந்த கப்பலை கடற்படையினர் சில வருடங்கள் பயன்படுத்தி விட்டு பின்னர், பயன்பாட்டில் இருந்து நீக்கியதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ரங்கலை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்படடிருந்த இந்த கப்பல் வேறு ஒரு கப்பல் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு வாகனங்களுடன் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இலங்கை ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டுத் துளைக்காக ஆடம்பர 8 கார்கள் ஆகியன நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் நிர்வாகப் பாதுகாப்பின் கீழ் இவை வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பை அண்மித்த கடற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்டன.
போர்க் காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரால் 25 வாகனங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இன்றைய தினம் கடலில் மூழ்கடிப்பு செய்யப்பட்டவை 8 கார்களாகும்.
ஜனாதிபதி செயலகத்தில் இவ்வளவு காலமாகவும் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடாக கடற்படையிடம் கையளிக்கப்பட்டன.
இந்த குண்டு துளைக்காத வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்திருந்தால் அவற்றை பாதாள உலகக் குழுவினர் கொள்வனவு செய்யலாம் என்ற அச்சம் காணப்பட்டதால் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.