வெளிநாட்டில் மரணித்தவர்களை எடுத்துவர புதிய நடைமுறை
24 Mar,2018
வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் சடலங்களை சிரமமின்றி எடுத்துவருவதற்கான புதிய வசதிகளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உறவினர்கள் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அல்லது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு தேவையான அடையாள ஆவணங்கள், சத்தியக்கடதாசிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதனை இயலுமாக்கும் புதிய முறைமையொன்றை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
இதுவரையிலும், மரணித்த நபரின் உறவினர்கள் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது வெளிநாட்டில் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதனை அங்கீகரிப்பதற்காக குறித்த ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கவேண்டியிருந்தது.
புதிய முறைமையின் கீழ், மரணித்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடிவதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து பிரதேச செயலாளர்களையும் அறிவுறுத்தும் வகையிலான சுற்றுநிரூபம் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
மரணித்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கொழும்பிலுள்ள கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு அல்லது யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு பிரயாணங்களை மேற்கொள்ளாது, அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் அவற்றை செயற்படுத்திக்கொள்வதனை இந்த புதிய முறைமை இயலுமாக்குகின்றது.
வெளிநாட்டில் மரணம் ஒன்று இடம்பெற்றால், கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திற்கு நீண்ட பிரயாணங்களை மேற்கொள்வதனையும், தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் செலவீனங்களையும் தவிர்க்கவும், இந்த புதிய ஏற்பாட்டினால் நன்மையடைவர் எனவும் இதுதொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.