ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள், தமக்கான உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்கு உரித்துடையவர்கள். அவர் களது அத்தகைய கோரிக்கை நிராகரிக்கப்படுமாயின், வெளி யக சுயநிர்ணய உரிமை யைக் கோரும் உரித்து அவர்களுக்கு உண்டு என்று கருத்து வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
பழுத்த அரசியல்வாதி என்ற வகையில் அவரது மேற்குறித்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கை தனது 70ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடியிருக்கின்றது. அந்நியர்கள் சுமார் 443 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து தமது ஆட்சியை நிலை நிறுத்தியிருந்தனர்.
இவர்கள் தமது மதமான கிறிஸ்தவ மதத்தை இங்குள்ள மக்களிடம் திணிப்பதில் அக்கறை காட்டியுள்ளனர். இதனால் இங்குள்ள ஏராளமான மக்கள் தாம் பாரம்பரியமாகப் பின்பற்றி வந்த த மது மதங்களைத் துறந்து, மாற்று மதத்தைத் தழுவிக் கொண்டனர்.
அந்நியர்கள் நாட்டின் பொது மக்களது கல்விக்கும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்கினர். பெரும் பொருள் செலவில் மருத்துவமனைகளும், கல்விக்கூடங்களும் அவர்களால் அமைக்கப்பட்டன.
தனித்து இயங்கிய தமிழினம் அந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்டது
அந்நியரின் வருகைக்கு முன்னர் தமிழர்களுக்கெனத் தனியான அரசுகள் அமைந்திருந்தன.
தமக்கெனத் தனியான பிரதேசங்களையும் தமிழர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அந்நியர்கள் தாம் ஆட்சி செய்வதற்கு வசதியாக நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டனர்.
இதுவே தமிழர்கள் பேரினவாதிகளிடம் அடிமைப்படுவதற்குக் காரணமாகிவிட்டது. அந்நியரின் ஆட்சிக் காலத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்கள் காண்பிக்கப்படவில்லை.
எந்த இனமாக இருந்தாலும் திறமைசாலி களையே அவர்கள் தமது நிர்வாகப் பணிகளில் இணைத்துக் கொண்டனர். அந்த வகையில் தமிழர்கள் முன்னிலை பெற்றுத் திகழ்ந்தனர்.
பெரும்பான்மையித்தவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. சந்தர்ப்பம் கிடைக்கும்வரை யில் அவர்கள் காத்திருக்கவும் செய்தனர்.
சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் புறக்கணிப்பு
நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், நடந்த அரசியல் செயற்பாடுகள் தமிழருக்கு எதிரானவையாகவே இருந்தன. அவர்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன.
அவர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த அவர்களது பூர்வீக நிலங்கள் திட்டமிடப் பட்ட வகையில் பறித்தெடுக்கப்பட்டன.
மொழி உரிமையும் பறிக்கப்பட்டது. அதற்காக நீண்ட போராட்டங்கள் இடம்பெற்றன. வன்செயல்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.
அடுத்தடுத்து இடம்பெற்ற இனவன்செயல்களும், நீண்ட காலமாகத் தொடர்ந்த போரும் அவர்களைச் சின்னாபின்ன மாக்கிவிட்டன.
இன்று அனைவராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே ஈழத் தமிழ் மக்கள் வாழநேர்ந்துள்ளது. பன்னாட்டுச் சமூகமும் கூட அவர்களைக் கைவிட்டுள்ளதாகவே கருத முடிகின்றது.
இந்த நிலையில், சம்பந்தனின் கருத்துக்கள் முக்கியத்து வம் பெறுகின்றன.தந்தை செல்வா சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி எனப்படுகின்ற சமஷ்டி ஆட்சி முறை என்ற நிலைப்பாட்டிலேயே தமது இறுதிக் காலம்வரை உறுதியாக நின்றார். அவர் தனிநாட்டுக் கோரிக்கையை ஒருபோதுமே முன்வைத்த தில்லை.
புதிய அரசமைப்பு முயற்சி கூட கிடப்பில் போடப்பட்டுவிட்டது
ஆனால் தந்தை செல்வா இன்று உயிருடன் இருந்திருந்தால், தமிழர்களுக்கெனத் தனியானதொரு நாட்டை கோரியிருக்கவும் வாய்ப்ப்புள் ளது. அந்த அளவுக்கு தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
புதிய அரசமைப்பின் ஊடாகவேனும் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமெனத் தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அரசும் இந்த விடயத்தில் தான் அக்கறை காட்டுவதாகக் காட்டிக் கொண்டது.
ஆனால் மகாசங்கத்தினர் உட்பட சிங்கள இனவாதிகள் அரசமைப்பின் புதிய உருவாக்கத்தை மூர்க்கத்தன மான முறையில் எதிர்த்தனர்.
புதிய அரசமைப்பின் உருவாக்கம் தமிழர்கள் தனிநாடு அமைப்பதற்கான ஒரு திறவுகோல் என மகிந்த தரப்பினர் கூறிப் பெரும்பான்மையின மக்களின் மனங்களைக் குழப்பினர்.
இதனால் புதிய அரசமைப்பின் உருவாக்கம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதன் உருவாக்கம் தொடர்பாகப் பேசுவதால் பயனொன்றும் கிடைக்கப் போவதில்லை.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என ஒரு காலத்தில் கூறப்பட்டது.
ஆனால் இன்றோ தமிழர்களின் தாயக பூமி துண்டா டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
தமிழர் பிரதேசங்க ளில் குடி யேற்றங்கள் இடம்பெறுகின்ற வேகத்தைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் தமிழர் தாயகமென ஒன்று இருக்குமா? என்ற சந்தேகமே எழுந்து நிற்கின்றது. மொழியும் நிலமும் ஒரு இனத்தின் இரு கண்களாகும்.
இவற்றைப் பறித்தெடுத்துவிட்டால் அந்த இனம் ஊனமாக்கப்பட்டுவிடும். இதுதான் இன்று இந்த நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
எந்த அரசு இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் தலைவிதியில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
அவர்களின் துயரங்கள் தொடரத்தான் போகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது சம்பந்தனிக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்தாகவும் அதனைக் கொள்ள வேண்டியுள்ளது.