சங்கானை ஆலயக் குருக்கள் கொலை - இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதிக்குமாறு
20 Mar,2018
சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று அறிவித்தார். வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று அறிவித்தார். வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் சிவானந்த குருக்கள் நித்தியானந்த குருக்கள் கொல்லப்பட்டார். அவரது இரு மகன்களும் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணிம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேன ஆகியோரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில், வழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இன்று இடம்பெற்றன.
அரச தரப்புச் சாட்சியங்கள் மற்றும் எதிரிகளிடம் முன்னெடுத்த குறுக்கு விசாரணைகளின் அடிப்படையில், வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்த் தனது தொகுப்புரையை முன்வைத்தார். 3 எதிரிகள் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களும் தம்மால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்த அரச சட்டத்தரணி, எதிரிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முதலிரண்டு எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் மூன்றாவது எதிரியான இராணுவச் சிப்பாய் சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட ஜோய் மகிழ் மகாதேவாவும் முன்னிலையாகி தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர்.