ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு
15 Mar,2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் நீதிமன்றுக்கு விடுக்காத நிலையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலகொட அத்தே ஞானசார தேரர் பொலன்னறுவையில் வைத்து மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இதில் ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ஞானசார தேரர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் உள்ள நிலையில் அவர் நேற்று நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இந்நிலையிலேயே கைது செய்து ஆஜர் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு மே 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.