கெஹலிய ரம்புக்வெலவின் மகன் அதிரடியாகக் கைது!
10 Mar,2018
இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இலங்கைக் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இணைப்பு
துப்பாக்கியால் பல்கலைக்கழக மாணவனை தாக்கிய கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது
முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல, கைத்துப்பாக்கியால், திறந்த பல்கலைக்கழக மாணவனின் தலையில் தாக்கி படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரமித் ரம்புக்வெல்ல, கொழும்பு நாராஹென்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன விபத்தும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலுமே சம்பவத்திற்கு காரணம்.
ரமித் ரம்புக்வெல்ல, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் ஒரு முறை தெரிவு செய்யப்பட்டார். தேசிய போட்டிகளில் சோபிக்காத அவர், தந்தையின் அரசியல் செல்வாக்கு காரணமாகவே தேசிய அணியில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரமித் ரம்புக்வெல்ல, ரஷ்ய பாலியல் தொழிலாளியை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்தும் ஒரு முறை சிக்கிக்கொண்டதாக பேசப்படுகிறது.
வெளிநாட்டு பயணம் ஒன்றின் போது மதுபோதையில் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்து பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான வாக்குகளை பெற்றது.
இதன் பின்னர் ராஜபக்சவாதிகள் தமது வன்முறைகளை மீண்டும் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
ராஜபக்ச ஆதரவாளரான தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவியும் இணைந்து துப்பாக்கியுடன் தலங்கம பிரதேசத்தில் பேருந்து சாரதி ஒருவரை தாக்கியிருந்தனர்