வதந்திகளை பரப்பியதால் சமூக வலைத்தளங்களை தடைசெய்தோம்
09 Mar,2018
குரோதத்தைத் தூண்டக் கூடிய வதந்திகளை சமூக வலைத்தளங்கள் பரப்பியதாலே வன்முறைச் சம்பவங்கள் நீடித்ததாக சாடியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறு செயற்பட்டவர் களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். சமூக வலைத்தலங்களைத் தற்காலிகமாக இடை நிறுத்தியதன் மூலம் நிலைமைகளை கடடுப் பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நிலைமைகள் தொடர்பாக நேற்று மாலை விடுத்த விசேட செய்தியிலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மீண்டு மொரு தடவை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
நேற்று முன்தினம் இரவு கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டை, அலவத்துகொட, பூஜாபிட்டிய பகுதிகளில் சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்ததால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது.
கண்டி மாவட்டத்தில் நேற்று மாலை வரை எந்தவொரு சம்பவங்களும் இடம்பெற்றதாகத் தெரிய வரவில்லை. இதன் காரணமாக நேற்றுக் காலை 10 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய மக்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. எனினும் கண்டி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் மறுதினம் காலை 6 மணிவரை ஊரடங்கை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்துக்கு வெளியே வெலிகம, கிரியுள்ள, குருவிற்ற பகுதிகளில் கல்வீச்சு போன்ற சிறிய சம்பவங்கள் மூன்று இடம்பெற்றதாக பதிவாகியுள்ளன. எனினும் நாட்டின் ஏனைய பகுதி களில் அமைதி நிலையே காணப்படுகின்றது.
எனது சிபாரிசுக்கமைய ஜனாதிபதியினால் சட்டம், ஒழுங்கு அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாகவே அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஆகியோருடன் நேற்றுக்காலை நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நான் ஆராய்ந்து, அடுத்து முன்னெடுக்க வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
கண்டி மாவட்டத்தில் உணவு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்கள், சொத்து சேதங்கள் என்பவற்றுக்கும் இழப்பீட்டைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குழப்பக்காரர்கள் சிலரது முட்டாள்தனமான செயற்பாடுகளால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிக மோசமானதாகும். அதேபோன்று சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதுடன், சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாப்பதை அரசு என்ற வகையில் எமது கடமையாகக் கொண்டிருக்கின்றோம். நாமனைவரும் ஒன்றுபட்டு சட்டம் ஒழுங்கைப் பேணி நல்லிணக்கத்துடனும் சகவாழ்வினூடாகவும் பயணிப்போம். ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற நிலைப்பாட்டில் செயற்பட உறுதி கொள்வோம் எனவும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.