இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ரா'அத் அல் ஹுசைன், அங்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை கேட்டுள்ளார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடரிலேயே தான் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் ஆணையர் ஷெயித் ரா'அத் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த வன்செயல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசாங்கம் ஆர்வத்தை காண்பிக்கவில்லை என்றும் அதற்கான தகமையை அது கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியான ஜகத் ஜயசூரிய விசயத்தில் பிரேசில் எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு பேசிய மனித உரிமைகள் ஆணையர், சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் தேவைப்படும்போது தலையீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "மாற்றகால நீதி"யை வழங்கி அதன் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இருவருட அவகாசத்தை இலங்கைக்கு கொடுத்திருந்தது.
அதன்பின்னர் இலங்கைக்கு பல முறை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்று ஆராய்ந்ததாகவும், தான் சில நிமிடங்கள் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ள ஆணையர், இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைத்தல் போன்ற சில முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இலங்கையில் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
'போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நீதி இல்லை': இலங்கை மீது ஐ.நா அதிருப்திபடத்தின் காப்புரிமை Getty Images
ஆனால், சித்ரவதை தொடர்வதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான போதுமான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்படவில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்வது, அதன் மூலமான வழக்குகள் நிலுவையில் இருப்பது, பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றிய காணியை இராணுவத்தினர் மீளக்கையளிக்காமல் இருப்பது போன்ற விசயங்கள் கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்த பெரிய வழக்குகள் இலங்கை நீதிமன்றங்களில் இன்னமும் நிலுவையில் இருப்பது குறித்து சுட்டிக்காட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர், அரசாங்க தரப்பினர் மற்றும் படையினர் சம்பந்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல் வழக்குகளை சர்வதேச நீதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை இது வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இலங்கை நீதித்துறை இரட்டைப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடரின் அமர்வு பிப்ரவரி 26 முதல் மார்ச் 23 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது