பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என சுமந்திரன் வாசுவின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி அணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்தது. இவை குறித்து விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நானே விவாதிக்க தயாரானேன்.
எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் இல்லாத காரணத்தினால் தம்மால் விவாதத்தில் ஈடுபட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன் சபையில் முரண்பட்டார். அவரது கோரிக்கையின் நியாயத்தை கருத்தில் கொண்டு விவாதத்தை பிற்போட முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன்.
எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்தவிருந்த விவாதத்தின் போது மொழி பெயர்ப்பு பிரச்சினையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிபடுத்தவில்லை. பாரளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்திலும் இந்த பிரச்சினையினை முன்வைக்கவில்லை.
அப்போதெல்லாம் வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் விவாதத்தை குழப்பினார். ஏனெனில் பிணைமுறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. பிரதமரும் நெருக்கடியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணைந்து முன்னெடுத்த சதியென நான் சபையில் குற்றம் சுமத்துகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கைகள் தமிழில் இல்லாமை
சபையில் எம்.பி.க்களான வாசு சுமந்திரன் கடும் சர்ச்சை
விவாதமும் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு
(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கைகளின் தமிழ் மொழிமூலமான பிரதி கிடைக்காமை குறித்து தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்த போது வாசுதேவ நாணக்காரவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ் மொழி கொள்கையை விடயத்தில் சுமந்திரன் எம்.பியின் விடாபிடியான விவாதத்தை அடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதமும் காலவரையறை இன்றி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன் நேற்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளையின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தன. இந்நிலையில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை அடுத்து நேற்றைய சபை நடவடிக்கைகளும் இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை சபை ஒத்திவைப்பு வேளையின் போது விவாதத்திற்கு எடுக்க முற்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றியதனை அடுத்தே சர்ச்சயைான நிலைமை ஏற்பட்டது.
இதன்போது எம்.ஏ சுமந்திரன் எம்.பி கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தமிழ் மொழி மூலம் கிடைக்க பெறவில்லை. இது தொடர்பான ஏற்கனவே நாம் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தோம். எனினும் இன்னும் இரு ஜனாதிபதி ஆணைக்குழுகளின் அறிக்கைகள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை. ஆகையால் இந்த விவாதத்தில் எமது கட்சியினால் கலந்து கொள்ள முடியாது என்றார்.
சுமந்திரனை கடுமையாக சாடிய வாசு
இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கடுமையாக சுமந்திரன் எம்.பி. யை ஒலிவாங்கி இயங்காமையின் போது கடுமையான முறையில் சாடி தொடர் வாதங்களை முன்வைத்தார்.
வாசுவை சாடிய சுமந்திரன்
அரச கரும மொழி அமைச்சராக இருந்த நீங்கள் இவ்வாறு வாதம் புரிகின்றமை கவலையளிக்கின்றது. நீங்கள் 1970 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றீர்கள். தேசிய மொழிக்கொள்கை தொடர்பில் உங்களுக்கு தெரியாதா?. எமக்கு தமிழ் மொழி மூல பிரதி கட்டாயம் அவசியமாகும். தெரியாத மொழிமூலமான அறிக்கையை கொண்டு எப்படி எம்மால் விவாதம் செய்ய முடியும். இது எமது தவறல்ல என்றார்.
தினேஷ் குணவர்தன குறுக்கீடு
இதன்போது தினேஷ் குணவர்தன எம்.பி கூறும் போது, பாராளுமன்ற அறிக்கைகள் தமிழ் ,சிங்கள மொழியில் இருக்க வேண்டும். எனினும் மொழிப்பெயர்ப்பின் தாமதத்தினால் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி அறிக்கைகள் மாத்திரம் இருந்தால் போதும் என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது என்றார்.
சுமந்திரனின் பதில்
இதன்போது தொடர்ந்து பேசிய சுமந்திரன் எம்.பி, எனினும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை மாத்திரமே சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் சமர்ப்பிக்க்பபட்டுள்ளன. ஆனாலும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையை மாத்திரம் வைத்து கொண்டு எம்மால் விவாதம் செய்ய முடியாது என்றார்.
மன்னிப்பு கேட்ட சபாநாயகர்
இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளிக்கையில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் இரு அறிக்கைகளையும் தமிழ் மொழியில் சமர்ப்பித்திருக்க வேண்டும். எனினும் சுமார் 8000 பக்கங்களை கொண்ட தொகுப்பு என்பதனால் இதனை மொழி பெயர்ப்பு செய்வது சிரமமான காரியமாகும். ஆகவே தமிழ் மொழியில் அறிக்கை சமர்ப்பிக்க முடியாமை குறித்து நான் மன்னிப்பு கோருகின்றேன். எனினும் தமிழ் மொழிமூலமான அறிக்கை கிடைக்கும் வரை ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அறிக்கைகள் மீதான விவாதத்தை ஒத்திவைக்கின்றேன் என்றார்.
இதனையடுத்து நேற்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளையின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தன. இந்நிலையில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை அடுத்து நேற்றைய சபை நடவடிக்கைகளும் இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.