எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மோசடிகளைக் கண்டறிவதற்கான உறுப்பினர்கள் நியமனம்
15 Feb,2018
எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மோசடிகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம்
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதிமுதல் 2018 ஜனவரி 31ஆம் திகதிவரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டன.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன செயற்படவுள்ளார்.
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ.ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.ஜே.கே.கீகனகே ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுவர்.