சிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள்; பிரித்தானிய அரசிடம் வலியுறுத்தல்
08 Feb,2018
லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
சிறிலங்காவின் இராணுவப்பிரிவில் 59வது டிவிசனின் 11வது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இனப்படுகொலையினைப் புரிந்த சிறிலங்கா இராணுவத்தின் போர்குற்றவாளிகளில் ஒருவராக இருக்கின்ற குறித்த அதிகாரிக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய அரசினை நா.தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்றிருந்த போர்குற்றங்கள் பாரிய மனித உரிமை மீறல்களை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் இணை அனுசரணை நாடாக பிரித்தானிய இருக்கின்றது என்பதனை நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.