73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: விடுதலை தொடர்பில் விரைவில் நடவடிக்கை
30 Jan,2018
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
பாரதூரமான வழக்குகளைத் தவிர ஏனைய கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என 2015ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரனை யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின்
அமைச்சில் நேற்று சந்தித்தனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு வழக்கினை மாற்றுமாறு கோரி அரசியல் கைதிகள் மூவர் 40 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றதுடன், அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015ஆம் ஆண்டு சந்தித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, 73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், அமைச்சரவையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட நீதி முறையிலான புதிய சட்டத்திற்கமைய, முக்கிய வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்கு வழியேற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, இந்த கைதிகளின் விடுதலை தொடர்பிலும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.