குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு !
27 Jan,2018
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்நாட்டு உள்விவகார அமைச்சினால் ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குவைத் அரசாங்கத்தினால் 2018 ஜனவரி 29ஆம் திகதிமுதல் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிவரை விசா சட்டத்தை மீறிய நபர்களுக்காக பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலத்தில் சட்ட குவைத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த இந்த காலப்பகுதியில் அதற்குரிய தண்டப்பணம் செலுத்தாமல், குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து விசேட அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் அந்நாட்டில் இருந்து வெளியேற முடியும்.
இவ்வாறு குவைத்தில் இருந்து வெளியேறுவோருக்கு சட்டரீதியிலாக மீண்டும் குவைத் அந்நாட்டுக்கு செல்வதற்கு (வேறு சட்ட ரீதியிலான தடைகள் இல்லாவிட்டால்) அனுமதி வழங்கப்படுகின்றது. மேலும் இந்த மன்னிப்பு காலப்பகுதியில் தங்களால் செலுத்தவேண்டிய குறித்த தண்டப்பணம் அனைத்தையும் செலுத்தி, அனுமதிக்கப்பட்ட விசா பத்திரம் ஒன்றை பெற்றுக்கொண்டு தொடர்ந்து குவைத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரயாணத்தடை அல்லது நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் பொருந்தாது. அவ்வாறு சட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் அருகில் இருக்கும் வதிவிட விவகார திணைக்களத்திற்கு சென்று தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் குறித்த மன்னிப்பு காலத்தில் குவைத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தும் தொடர்ந்தும் அங்கு தங்கி இருப்பவர்களை கைதுசெய்து வெளியேற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, குவைத் நாட்டில் சுமார் 15 ஆயிரம் இலங்கையர்கள் சட்ட பூர் வமான விசா இல்லாமல் தங்கி இருக்கின்றனர். இவ்வாறு அங்கு தங்கியிருப்பவர்களை அவர்களின் உறவினர்கள் இது தொடர்பாக அறிவுறுத்தி பொது மன்னிப்பு காலத்தில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.