எல்லை தாண்டி நுழையும் மீன்பிடி படகுகளுக்கு அதிக அபராதம்: இலங்கை மசோதா திருத்தம்
24 Jan,2018
தமிழகத்தின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை,ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், இலங்கை கடல் எல்லையில் அனுமதியின்றி நுழையும் மீனவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கும் திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீன்வளம் மற்றும் கடற்வளம் மேம்பாட்டுத்துறை மந்திரி மகிந்த அமரவீரா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். தற்போது, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 1.5 மில்லியன் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய மசோதாவில் இந்த அபராதம் அதிகபட்சமாக 175 மில்லியன் ரூபாய் என்ற அளவுக்கு கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மீன்பிடி படகுகள் அல்லாமல் உரிய அனுமதி இல்லாமல் நுழையும் படகுகளுக்கும் 7.5 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட நாட்டு தூதரகத்திற்கு உரிய தகவல் அளித்த பின்னர், படகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது