வயோதிபப் பெண் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்
21 Jan,2018
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா எனும் வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிற்கு உதவி புரியும் உறவினர் ஒருவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு குறித்த பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண் நகை மற்றும் பணத்திற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக மானிப்பாய் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.