கொழும்பு - தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்
13 Jan,2018
இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
வாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் 1,730 டி.இ.யூ கொள்ளளவு கொண்டது, இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தூத்துக்குடி நோக்கிக் கிளம்பும்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா சரக்குப்பெட்டக முனையத்தில் இருந்து, கடந்த ஜனவரி 9 அன்று தனது முதல் பயணத்தை எம்.வி.சார்லி தொடங்கியது.
இந்த கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக ஆணையத்தின் விற்பனை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தலைமை மேலாளர் உபுல் ஜயதிஸ்ஸா, தொடங்கப்பட்டுள்ள புதிய கப்பல் சேவைக்கு இலங்கை துறைமுக ஆணையத்தால் மிகச் சிறந்த சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தொழில்களுக்கு இந்த சரக்கு கப்பல் சேவை வாய்ப்பளிக்கும்.