இலங்கை: 'நாடு திரும்புவோரின் குழந்தைகளுக்கு குடியுரிமைக் கட்டணம் கூடாது'
29 Dec,2017
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழக முகாம்களில் தொடர்ந்தும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக
பல தமிழக முகாம்களில் குழந்தைகளுடன் இருக்கும் இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா நோக்கி சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருக்கின்றார்கள் என அந்த அமைப்பின் ஸ்தாபர் சீ.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க தமது முயற்சியின் பயனாக இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குடியுரிமையொன்று வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை திரும்பும் குறித்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கட்டணமாக அறவிடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தமது உயிரை பணயம் வைத்து, எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவிற்கு சென்று மீண்டும் தாயகம் திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இவ்வாறு கட்டணம் அறவிடப்படுகின்றமை சட்டவிரோதமான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கைக்கு திரும்பும் குறித்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கான குடியுரிமையை பெற்றுக் கொள்ள கட்டணம் அறவிடப்படக் கூடாது என சந்திரதாஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அமைச்சரவை விரைவில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு மீள திரும்பும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளை நல்லிணக்க செயற்பாடுகளுடன் இணைந்துக் கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபர் சீ.சந்திரதாஸன் குறிப்பிட்டுள்ளார்