சிதம்பரத்துக்கு கப்பல் சேவை
27 Dec,2017
திருவாதிரை உற்சவத்தை முன்னிட்டு காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவுக்குக் கப்பல் பயணம் மேற்கொள்ள இலங்கை – இந்திய அரசுகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சிதம்பரத்திலுள்ள அருள்மிகு நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி திருவாதிரை நாள் நன்னீராட்டு விழா இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கைப் பக்தர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கும், கப்பல் பயண ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துமாறு கோரவும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் இளங்கோவனையும், இந்தியத் துணைத் தூதர் நடராஜனையும் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, இந்து சமயப் பேரவை, கொடிகாமம் சிவத்தொண்டர் பேரவை, மாவிட்டபுரம் கந்தசாமிகோயில் திருப்பணிச் சபை ஆகியவற்றின் செயலாளர்கள் சென்று சந்தித்தனர். மறவன்புலவு கே.சச்சிதானந்தன் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
திருவாதிரை உற்சவத்துக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் அடியார்களுக்கான பயண ஆயத்தங்கள், கடவுச் சீட்டு, இந்திய விசா, செலவுக்கான பணம், கப்பல் கட்டணம் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கைக் கடவுச் சீட்டு வைத்திருப்போர் உடனடியாக இணைய வழியாக எந்தச் செலவுமில்லாமல் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களால் வரும் தடைகளை நிவர்த்திப்பதற்கு, முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தெரிவித்த சச்சிதானந்தன், கப்பல் ஏற்பாடு உறுதியானால் விசாவை இந்திய அரசு ஆகக் குறைந்த கட்டணத்தில் வழங்கும் வாய்ப்புள்ளதென்றும் குறிப்பிட்டார்.