தமிழர் நினைவு தூபி அருகே பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு
22 Dec,2017
யாழ்ப்பாணத்தில் உள்ள நாக விஹாரையின் விஹாராதிபதியின் பூதவுடலை, முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் தகனம் செய்யக்கூடாது என வலுவான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
யாழ். நாக விஹாரையின் விஹாராதிபதி ஞானரத்ன தேரர் உடல்நலமின்மை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவரது பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக நாக விஹாரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இறுதி கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, யாழ்ப்பாணம் - முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பூதவுடலை தகனம் செய்ய ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் அந்த நினைவு தூபி அமைந்துள்ள இடத்திற்கும், யாழ்ப்பாணம் கோட்டை அமைந்துள்ள பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் அன்னாரது பூதவுடலை தகனம் செய்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், தமிழர் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அழிக்கும் செயற்பாடு ராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து தமிழர் தரப்பினர் பெரும் எதிர்ப்பை இன்று வெளியிட்டு வருகின்றனர்.
அந்த நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் விஹாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வதனை தடுக்கும் வகையில் தமிழர் தரப்பினர் தடையுத்தரவை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1974-இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது