இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை: ரஷ்யா பயணிக்கும் அமைச்சர்கள்
17 Dec,2017
இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்டுள்ள இடைகால தடையுத்தரவை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபரிடம் உத்தியோகப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபரிடம் தான் இந்த கோரிக்கையை விடுத்ததாக ஹப்புதலை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைகால தடை உத்தரவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையில் தேயிலை பொதியிடப்படும் போது வண்டுகளுடன் தாம் பொதியிடவில்லை எனவும், கப்பல்களின் அனுப்பி வைக்கப்படும் போது வேறு துறைமுகங்களிலிருந்து வண்டுகள் பொதிகளுக்குள் சென்றிருக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்த விடயம் குறித்து கலந்துரையாடல் நடத்துவதற்காக விரைவில் ரஷ்யா பயணிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் கெப்ரா என்றழைக்கப்படும் வண்டு காணப்பட்டமையை அடுத்து, இலங்கை தேயிலைக்கு ரஷ்யா இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் இலங்கையின் தேயிலை உற்பத்தி பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் தேயிலை செய்கையானது பெரும்பாலும் மலையகத்தை அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சக்கணக்கான தமிழர்கள் தேயிலை தொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
ரஷ்யாவினால் விதிக்கப்பட்டுள்ள இடைகால தடையுத்தரவினால், மலையக தமிழர்களின் வாழ்க்கை பெரிதும் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக மலையக அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் கெப்ரா என்றழைக்கப்படும் வண்டு காணப்பட்டமையினால், இலங்கை தேயிலை துறை எதிர்காலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்திக்கக்கூடும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.