கைது செய்ய தடை கோரி கோத்தபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு
28 Nov,2017
அரசாங்கம் தன்னை கைது செய்வதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக போலிஸ் மா அதிபர் உட்பட போலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தனது தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஏ.ராஜபக்ஷவை நினைவுகூர அம்பாந்தோட்டை பகுதியில் நூதன சாலையொன்று அமைக்கும் போது 90 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாகத் தெரிவித்து போலீசார் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகக் கூறியுள்ள கோத்தபய ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக தன்னைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தன்னை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதனை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோத்தபய ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.