இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்களும் இதன்போது பிரசன்னமாகியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான தாம் அறிந்த விடயங்களை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெளிவூப்படுத்தியதாக ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள தமது கட்சி அங்கத்தவர்கள் எந்தவொரு அச்சமும் இன்றி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமானதாகவும் அவர் கூறினார்.
தவறுகள் இழைக்கப்படலாம், குறைபாடுகள் காணப்படலாம் எனினும், அவற்றை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தி நல்லாட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அமைச்சர்கள்
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் இதற்கு முன்னர் அமைச்சர்களான கபீர் ஹாசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் சாட்சியமளித்திருந்தனர்.
இந்த பிணைமுறி விடயம் குறித்து தான் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க தயார் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டவும் தான் தயாராகவுள்ளதாக பிரதமர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சத்திய கடிதம் மூலம் இந்த விடயத்தை ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்ததுடன், சில விடயங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
இலங்கையில் பிரதமர் ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலைக்கு பிரசன்னமாகி சாட்சியமளித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி சந்தேகநபரான அர்ஜுண் எலோசியஸ் உடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்ததாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கோப் குழுவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பான தகவல்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சுஜீவ சேனசிங்க, ஹெக்டர் ஹப்புஆமி, தயாசிறி ஜயசேகர, அஜித் பீ பெரேரா மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் அர்ஜுண் எலோசியஸுடன் தொலைபேசியூடாக தொடர்புகளை வைத்திருந்ததாக நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பிணைமுறிகளிலேயே மோசடி இடம்பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணைகளை நடத்துவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறித்த காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன் மகேந்திரனின் உறவினராக அர்ஜுன் எலோசியஸ் மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.