முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்ட் காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட எண்மருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியப் பதிவுகள் பெப்ரவரி 26 மற்றும் மார்ச் 26ஆம் திகதிகளில் நடைபெறுமென கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று அறிவிக்கப்பட்டது.
அவன்ட் காட் மெரிடைம்ஸ் நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை அமைத்து, அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தினர்.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை, கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்புகளும் நிராகரிக்கப் பட்டன.
அதன்பின்னர், சந்தேகநபர்களுக்கு குற்றப் பத்திரம் வாசித்துக்காட்டப்பட்டதுடன், குற்றவாளி களா, நிரபராதிகளா என வினவப்பட்டபோது, சந்தேகநபர்களின் சட்டத்தரணிகளால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
19 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப் பத்திரம் வாசிக்கப்பட்டது எனவும், தமது சேவை பெறுநர்களுக்கு அதிலுள்ள சட்டப்பிரிவுகள் தொடர்பான விளக்கங்கள் இல்லையென்பதால் உடனடியாக தெரிவிக்கமுடியாது எனவும் அறிவித்தனர்.
சாட்சியாளர்களின் பட்டியலும் ஆவணங்களும் வழங்கப்படவேண்டும் என்றும், அதைக் கொண்டே தாம் பதிலளிக்கமுடியும் என்றும் குறிப்பிட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார, சாட்சியப் பதிவுக்குத் திகதி குறிக்கப்பட்டாலேயே, கோரப்படும் ஆவணங்களை வழங்கமுடியும் என்று மன்றுக்கு அறிவித்தார்.
60 சாட்சியாளர்கள் உள்ளனர் என்றும், 208 ஆவணங்கள் உள்ளன எனவும் தெரிவித்த ஜானக, அவற்றை மறைப்பதற்கான எவ்வித அவசியமும் முறைப்பாட்டா ளர் தரப்புக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அதனையடுத்து, சாட்சியப் பதிவுக்கான தினங்காக பெப்ரவரி 26 மற்றும் மார்ச் 26ஆம் திகதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆவணங்களையும் சாட்சியாளர்கள் பட்டியலையும் டிசெம்பர் 8ஆம் திகதிக்கு முன்னர், சந்தேகநபர்கள் தரப்புக்கு வழங்குவதாக அரச சட்டத்தரணி அறிவித்தார்.