இலங்கைக்கு மீண்டும் ஜெனீவாவில் கண்டம் விஷேட குழுவை தூது அனுப்பியது அரசாங்கம்
12 Nov,2017
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதன் கிழமை மீளாய்வு செய்யப்பட உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடர் கடந்த திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் அமைப்புகள், சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட அறிக்கை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய பங்காளர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையில் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களுக்கான இழப்பீடு, காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், குற்றமிழைத்தவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை , போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தல், பாதுகாப்பு துறையினரின் சட்டவிரோத கைதுகள் மற்றும் தடுப்புக்கள் , சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட பல்வேறு மனித உரிமைகளை சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக இலங்கையின் விவகாரங்கள் மீளாய்வு செய்யப்பட உள்ளன.
குறிப்பாக சித்திரவதைகள் மற்றும் சட்டத்திற்கு முரணான தடுப்புக்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கைக்கு நெருக்கடிகளை கொடுக்கும். முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள போர் குற்ற வழக்குகள் குறித்தும் இலங்கை தரப்பிடம் கேள்விகள் எழுப்பும் நிலை காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கை சார்பில் இந்த மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு இன்று ஜெனிவா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.