பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு: விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!
08 Nov,2017
பிலியந்தலை பேருந்து நிறுத்தத்தில் கிளேமோர் குண்டு பொருத்திய மற்றும் வெடிக்கச் செய்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பிலியந்தலை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த முப்பது பேர் கொலை செய்யப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சச்சிதானந்தன் ஆனந்த சுதாகர் எனப்படும் வசந்தன் மற்றும் தேவேந்திரன் சின்னையா ஆகியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிபதி பியசேன ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.
அதில், சந்தேக நபர்கள் மீதான குற்றங்களை அரச தரப்பு சட்டத்தரணிகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருப்பதாகக் கூறி, முதலாவது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இரண்டாவது சந்தேக நபரான தேவேந்திரன் சின்னையா விசாரணையின்போதே உயிரிழந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.