இலங்கை: 100 வயதை கடந்த முதியோருக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை
08 Nov,2017
இலங்கையில் நூறு வயதை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர சிறப்பு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் குறைந்த வருமானத்தை கொண்ட 100 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதாந்திரம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.
இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல்கள் நலன்புரிகள் மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி திஸநாயக்கா, இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் முன் வைத்திருந்தார்.
நாடு தழுவிய அளவில் 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் 350 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இலங்கையில் வருமானம் குறைந்த 70 வயதிற்கும் மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அரசினால் மாதாந்திரம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
மருத்துவத் தேவை மற்றும் போஷாக்கு உணவு உட்பட பல்வேறு தேவைகளுக்கு அது உதவியாக அமைகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.