முஸ்லிம் பிரதேசம்தான் போதைப் பொருள் விற்பனையில் முதலிடம்:
08 Nov,2017
நிஹாரா மெளஜூத்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான புள்ளி விபரங்களைப் பார்க்கின்ற போது, பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் தான் மிக அதிகமான விற்பனையாளர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, எனப் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் நிஹாரா மெளஜூத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் மாவட்டமட்டக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது, இந்த புள்ளி விபரங்களை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, மிகவும் வேதனையாகவிருப்பது இந்த விடயம் தான்.
ஏனெனில், அதிகமான தமிழ்க் கிராமங்களையும், தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியது தான் மட்டக்களப்பு மாவட்டம். அதில் போதைப்பொருள் விற்பனை அதிகமாகக் காணப்படுவது, கல்குடாத் தொகுதியின் அதுவும் முஸ்லிம் பிரதேசமான பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் தான்.
இந்த விடயம் தொடர்பில் நம் சமூகம் எங்கே செல்கிறது? நாம் எங்கே இருக்கிறோம்? என்று கூடுதலாகச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த சமூகத்தை வழிநடாத்திச் செல்பவர்கள் இந்த இளைஞர்கள் தான். இதில் இளைஞர்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு இந்த சமூகத்தை நல் வழிக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
குறித்த பிரதேசத்தில் அண்மையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் உள்ளடங்குகின்றார்.
காலப்போக்கில் இந்தச்சிறுவனும் போதைக்கு அடிமையாகும் நிலைமை ஏற்படலாம். குறித்த போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளைத் தொடர்ச்சியாக நாங்கள் இப்பிரதேசங்களில் நடாத்தி வருகின்றோம். இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கூடுதல் கவனஞ்செலுத்தி இந்த தீய பழக்கத்திலிருந்து நம் இளம் சமூகத்தைப் பாதுகாக்க முன்வரவேண்டுமெனத் தெரிவித்தார்.