கையும்மெய்யுமாக பிடிபட்ட இரண்டு திருடர்கள்-பொதுமக்களால் நையப்புடைப்பு!
04 Nov,2017
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாது,
இன்று முற்பகல் 11.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் பகுதி வீதியில் நடந்து வந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரிக்க முயன்ற வேளையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களாலும், பொதுமக்களாலும் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரையும் பொதுமக்கள் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.