பிரபாகரன் உயிருடன் இருக்கையில் தற்போது தேசப்பற்றுள்ளவர்கள் என அடையாளப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தேசத்துக்காக முன்வராமல் ஓடி ஒளிந்து மறைந்திருந்தனர். ஆனால் பிரபாகரன் உயிரிழந்த பின்னர் தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு கூலி பணத்திற்கு போராட முன்வந்துள்ளதாக தெரிவித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
யுத்தகாலத்தின் போது உயிருக்கு அஞ்சி எனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து கொண்டு இருப்பவர் தற்போது பாராளுமன்றத்திற்கு குண்டுபோட போகின்றாராம். வரலாற்றில் இவ்வாறு கதைத்தவர்களின் உடல் இனங்காண முடியாமல் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டுவிட்டது. இதன்படி அவரும் அதனைத் தான் விரும்புவது போல் தெரிகின்றது என்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு சபை நேற்று செவ்வாய்க் கிழமை இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டில் இடைக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. யுத்தம் ஏற்பட்டது. அதேபோன்று தெற்கில் வேறு பிரச்சினைகளும் காணப்பட்டன. யுத்தம் இராணுவ வீரர்களினால் நிறைவுசெய்யப்பட்டது. எனினும் தற்போது யுத்த வெற்றிக்கு உரிமை கோருபவர்கள் அதற்காக எதனையும் செய்யவில்லை. யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் நாம் முடிவு செய்தோம். நாட்டில் நல்லிணக்கம் அவசியம் என தீர்மானித்தோம். எனினும் இனவாதிகள், ஊழல் மோசடிக்காரர்கள் இதற்கு ஆதரவு வழங்குவதாக இல்லை. பிரபாகரன் நாட்டை பிளவுபடுத்த முற்பட்ட போது தேசப்பற்றுள்ளவர்கள் என அடையாளப்படுத்தி கொண்டு தற்போது செயற்படுபவர்கள் தேசத்துக்காக முன்வராமல் ஓடி ஒளிந்து மறைந்திருந்தனர். ஆனால் பிரபாகரன் உயிரிழந்த பின்னரே தேசப்பற்றாளர்கள் என கூறி போலி வேடம் போடுகின்றனர்.
இலங்கையின் பெரும்பான்மையினத்த வர் சிங்களவர்கள் என்பதில் எந்த சந்தேக மும் கிடையாது.என்றாலும் ஒரு இனம் மற்றொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அனைத்து இனங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.
யுத்தத்தின் பின்னர் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். தற்போது அதற்கான பொறுப்பு எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எந்தவொரு சித்திரவதைகளையும் செய்யவில்லை. அவர்க ளுக்கு இராணுவத்தினரால் மருந்து, சாப்பா டுகளை வழங்கினோம். அவர்களுக்கு புனர்வாழ்வும் அளித்தோம். எனினும் சில இராணுவ வீரர்களினால் அநியாயங்கள் நடந்தன. இதனால் எமக்கே அது பாதிப்பாக வந்துள்ளது. இவர்கள் ஆட்சியாளர்களின் கட்ட ளைபடி செயற்பட்டவர்களாவர்.
தற்போது புதிய அரசியலமைப்புக்காக இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசியல் இலாபம் தேடுவதற்கு இது தருணம் அல்ல. நாட்டின் நலனை மறந்து ஒரு சிலர் செயற்படுகின்றனர். நேற்று (நேற்றுமுன்தினம்) அரசியலமைப்புக்கு எதிராக ஒரு சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். யுத்தம் நடந்து கொண்டிருந்த போது பிரபாகரன் நாட்டை பிளவுபடுத்தும் போது நாட்டின் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. தற்போது கூலி பணத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். எனவே இவர்களுக்கு அஞ்சி நாம் எமது பயணத்தை நிறுத்த மாட்டோம். தொடர்ந்து பயணிப்போம்.
இடைக்கால அறிக்கை தொடர்பில் பலர் விமர்சிக்கின்றனர். இந்த அறிக்கையில் பெளத்த மத வளர்ச்சிக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினர் சிங்கள மக்களை திசைதிருப்ப முற்படுகின்றனர். ஒற்றையாட்சி, நாட்டைப் பிளவுபடுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. இதன்படி தனிநாடு என்பது மாயையாகும். மக்களின் மூளைக்கு விஷம் ஏற்ற முற்படுகின்றனர். பெளத்த மதத்திற்கான முன்னுரிமை உள்ளது. ஏனைய மதங்களுக்கும் சமவுரிமை வழங்கியுள்ளோம். ஒற்றையாட்சியில் அச்சுறுத்தல் என்றால் அதனை இல்லாமல் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறைமையையும் பிளவுபடுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார். அத்துடன் நாட்டில் ஒரு பொலிஸ் துறையே இருக்கும். ஒரு பொலிஸ் மா அதிபரே இருப்பார். எனினும் மாகாண மட்டத்தில் பொலிஸ் பிரிவு இருக்கும்.
இந்நிலையில் வீரவசனம் பேசக் கூடியவர்கள் 2005 பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் பேச முடியாது. பேசினால் கடுமையான அச்சுறுத்தலே வரும். அந்தக் காலத்தின் போது அமைச்சர்கள் எவரும் சுயமாக பேசமுடியாது. முன்னைய ஆட்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனது வழக்கை விசாரித்த சட்டத்தரணிகளை நீதிபதிகளாக மாற்றினர். நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குடும்பம் நிர்வகித்து வந்தது. இராணுவத்தில் சேர்ந்த ஆட்சியாளரின் மகன் செய்தது ஒன்றுமில்லை. எனினும் மகனுக்கு தந்தையை விட பாதுகாப்பு இருந்தது. மிஹின்லங்கா மூலம் நாடு நஷ்டமடைந்தது. வசிம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு இன்னும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் நாட்டில் ஜனாதிபதி முறைமை இருக்கக்கூடாது என தீர்மானம் எடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நிலைப்பாட்டை மதிக்கிறேன். எனினும் ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அது நாட்டின் பாதுகாப்புக்கு சிறந்ததாக அமையும்.
மஹிந்த ராஜபக் ஷவின் விமர்சனங்களுக்கு ஏமாற்றம் அடைந்து செயற்படும் பிக்குகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். பிரபாகரன் இருக்கும் போது எவரும் முன்வரவில்லை. மேலும் யுத்த காலத்தின் போது உயிருக்கு அஞ்சி எனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துக் கொண்டு இருப்பவர் தற்போது பாராளுமன்றத்திற்கு குண்டு போட போகின்றாராம். இவ்வாறு கதைத் தவர்களின் உடல் இனங்காண முடியாமல் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டு விட் டது. இதன்படி அவரும் அதனைத் தான் விரும்புகின்றார் போல் தெரிகின்றது.
அரசியலமைப்பை ஆதரிப்போரை கொலை செய்வதாக இராணுவத்தில் இருந்த ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் ஒழுக்கமானவர்கள் அல்ல. இவர்களின் செயற்பாடுகளினால் தான் பிரச்சினைகளும் எழுந்துள்ளன என்றார்