இலங்கையின் கிழக்கே கல்முனை மாநகர சபை அதிகாரத்திற்குரிய பகுதியை பிரித்து புதிய உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
கல்முனை மாநகர சபை பகுதியிலிருந்து தமது பிரதேசத்தை பிரித்து தனியானஉள்ளூராட்சி சபையாக உருவாக்க வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்கிழமை 2வது நாளாக அந்தப் பிரதேசத்தில் கடையடைப்பு அனுசரிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்முனை மற்றும் கல்முனைக்குடி பிரதேச முஸ்லிம்கள், இன்று செவ்வாய்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரிய பள்ளிவாயல் முன்பாக ஒன்றுகூடிய பெரும் எண்ணிக்கையிலான அந்த பிரதேச முஸ்லிம்கள், பிரதேச செயலகம் வரை பேரணியொன்றையும் நடத்தி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
இரண்டாவது நாளாகவும தொடரும் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களின் போராட்டம்
Image caption
இரண்டாவது நாளாகவும தொடரும் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களின் போராட்டம்
கல்முனை மாநகர சபை அதிகாரத்திற்குரிய பகுதியை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டாம். அவ்வாறு பிரிக்கப்பட்டால் நான்கு உள்ளுராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குரிய பகுதி கல்முனை தமிழ் , கல்முனை முஸ்லிம் மற்றும் சாய்ந்தமருது என மூன்று சிவில் நிர்வாக ரீதியான பிரிவுகளை கொண்டுள்ளது. 65 - 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளது.
கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரதேசம் தனியாக பிரிக்கப்பட்டால் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை முஸ்லிம்கள் இழந்துவிடுவர் என கல்முனை மற்றும் கல்முனைக்குடி முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
பள்ளிவாசல் முன்பாக கூடிய கல்முனை முஸ்லிம்கள்
Image caption
பள்ளிவாசல் முன்பாக கூடிய கல்முனை முஸ்லிம்கள்
இதே கருத்தை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் கூட்டமைப்பு விடுத்திருந்தது.
இதேவேளை தமது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி அதிகாரம் கோரி சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களின் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக அந்தப் பிரதேசத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதால் கல்முனையிலிருந்து இந்த வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தொடர்ந்து தடைப்பட்டுள்ளன