இலங்கையானது நம்ப கரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயா திக்கத்தை நோக்கிப் பயணிக்கும்
இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்டாவிடின் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறலாம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லலாம். இவ்வாறு பல நிலைமைகள் ஏற்படலாம்
பென் எமர்ஷன்
இலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடின் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற் கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும்
பப்லோ டி கிரிப்
நிலைமை படிப்படியாக மாறிக்கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் ஆதரவுப் போக்கை வெ ளியிட்டு வந்த ஐக்கிய நாடுகள் சபை தற்போது சற்று இறுக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது என்றே தோன்றுகின்றது. அது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மட்டத்தில் பல்வேறு நெருக்குதல்களை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கும் செயற்பாட்டில் சர்வதேச மட்டத்தில் நிலைமைகள் மாற்றமடைவதை காண முடிகின்றது.
அதாவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு இலங்கை விவகாரம் கொண்டுசெல்லப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தாலும் அதற்கான சாத்தியம் தற்போதைய நிலைமையில் குறைவாக இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஜெனிவா மனித உரிமை பேரவை மட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கின்றது.
கடந்த 12 மாத காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகைதந்த மூன்று ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகளும் இலங்கையின் பொறுப்புக்கூறல் தாமதம் தொடர்பில் கடும் அதிருப்தியை முன்வைத்ததுடன் பல்வேறு வகையான எச்சரிக்கையை விடுத்துச் சென்றுள்ளமையானது ஐக்கிய நாடுகளின் அதிகரிக்கின்ற நெருக்குதல்களை வெளிக்காட்டிநிற்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடையப்போகின்றன. இந்நிலையில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பதனை ஐக்கிய நாடுகள் சபை உணர்ந்துள்ளதாகவே தெரிகின்றது.
அதனாலேயே அரசாங்கம் மீதான நெருக்கு தல்களை அதிகரிக்கும் போக்கை கையாள்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது. இலங்கைக்கு இவ்வருடத்
தில் விஜயம் மேற்கொண்ட உண்மை நீதி நட்டஈடு மற்றும் மீள்நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் போது அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமையை பாதுகாப்பது தொடர்பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்ஷன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகிய மூவரும் அரசாங்கத்தை விமர்சித்தே மதிப்பீட்டு அறிக்கைகளை வெ ளியிட்டுள்ளனர் என்று கூறலாம்.
முதலில் இலங்கைக்கு இவ்வருடத்தில் விஜயம் மேற்கொண்ட உண்மை நீதி நட்டஈடு மற்றும் மீள்நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் வெ ளியிட்டுள்ள மதிப்பீடுகளின் சாரம் சத்தை பார்ப்போம்.
அதாவது யுத்தவெற்றி வீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதைப் போன்றதாகும்.
இலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடின் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற்கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும் என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.
இதற்கு சிறந்த உதாரணமாக பிரேஸிலில் அண்மையில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை குறிப்பிடலாம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இடம்பெறும். பொறுப்புக்கூறல் பொறிமுறையை தொடர்ந்தும் தாமதமாக்கவேண்டாம்.
இவ்வாறு தொடர்ந்தும் இந்த செயற்பாட்டை தாமதமாக்குவது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது. கால அட்டவணையுடன் கூடிய பரந்துபட்ட மற்றும் சுயாதீனமான நிலைமாறுகால நீதிப்பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்வைக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் சட்டம் சர்வதேச தரங்களைப் பின்பற்றுவதாக அமையவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விடயங்களை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவேண்டும். இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணி தொடர்பான ஒரு வரைபடத்தை உடனடியாக தயாரிக்கவேண்டும். காணி விடுவிப்பு தொடர்பான ஒரு நேர அட்டவணை அவசியமாகின்றது.
மீளளிக்கப்படாத காணிகளுக்கு நட்டஈடு வழங்குவது அவசியமானதாகும். சுயாதீன தன்மை வெளிப்படைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையில் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்படவேண்டும். காணாமல்போனோர் அலுவலகத்தை கண்காணிப்பதற்காக பாதிக்கப்பட்டோரினால் ஒருங் கிணைக்கப்பட்ட ஒரு குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்.
அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களின் நன்மை கருதி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கான ஆணையாளர் நியமனத்தில் பாதிக்கப்பட்டோர் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக ஒரு பரந்துபட்ட திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு நினைவுகூரும் செயற்பாடானது நட்டஈடு பெறுவதைப் போன்ற ஒரு உணர்வைக் கொண்டது. இவையே பப்லோ டி கிரிப்பின் மதிப்பீடுகளில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன.
குறிப்பாக பப்லோ டி கிரிப் இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஆனால் அம்முறை முன்வைத்துள்ள பரிந்துரைகளை விட இம்முறை முன்வைத்துள்ள பரிந்துரைகள் சற்று வித் தியாசமானவையாக உள்ளன.
இந்நிலையில் பப்லோ டி கிரிப்பின் இலங்கை விஜயம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் சட்ட கற்கைகளுக்கான தெற்காசிய நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான நிரான் அங்கேட்டல் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் வந்த பென் எமர்ஷன் என்ற ஐக்கிய நாடுகளின் நிபுணர் காரசாரமான பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.
ஆனால் இம்முறை வந்த ஐக்கிய நாடு களின் நிபுணர் பப்லோ டி கிரிப்பின் அறிக்கை வலுவானதாக இல்லை. அதில் உண்மையை கண்டறியும் ஆணைக் குழுவை நிறுவுமாறும் பொறுப்புக்கூறலை தாமதப்படுத்தவேண்டாம் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
பப்லோ டி கிரிப் கொழும் பில் நடத் திய செய்தியாளர் சந்திப்பில் சில வலுவான விடயங்களை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட அறிக்கையில் வலுவான விடயங்கள் இருப்பதாக நான் கருதவில்லை. காரணம் சர்வதேசம் அறிக்கையையே பரிசீலிக்கும். மேலும் தற்போதைய நிலைமையில் இலங்கையின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நெருக்குதல்கள் அதிகரிக்கலாம். ஆனால் இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்கு செல்லும் என்று கூற முடியாது. அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது என்று சுட்டிக்காட்டுகின்றார்.
இதனிடையே பயங்கரவாதத்தை ஒடு க்கும் போது அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமையை பாதுகாப்பது தொடர்பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரும் கடும் அதிருப்தியுடனான கருத்துக்களையே முன்வைத்திருந்தார். அவர் முன்வைத்த கருத்துக்களை பார்ப்போம்.
அதாவது இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்விதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றது முன்னேற்றம் தாமதமடைந்துள்ளது என்பதுடன் அவை களரீதியாக நிறுத்தப்பட்டுவிட்டன என்றே கூறவேண்டும்.
தற்போதைய கள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பது கடினமாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுமைக்கும் எல்லை இருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்டாவிடின் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகளை இலங்கை இழக்கலாம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லலாம். இவ்வாறு பல நிலைமைகள் ஏற்படலாம்.
பயங்கரவாத தடை சட்டமானது இன்றுவரை தமிழ் சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒரு சட்டமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது புதிதாக உருவாக்கப்படுகின்ற சட்டமூலம் தொடர்பாகவும் விமர்சனங்கள் உள்ளன. இந்த விடயங்களை ஆராய்ந்து சர்வதேச தரத்திற்கு அமைய புதிய சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பென் எமர்ஷன் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் கடந்த 36 ஆவது மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் உரையாற்றும்போது பல்வேறு காரசாரமான விடயங்களை முன்வைத்திருந்தார்.
அதாவது இலங்கை அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை உடனடியாக நிறுவவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். விசேடமாக இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக தீர்க்க வேண்டும்.
அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டும். அதனூடாக பொறுப்புக்கூறல் பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி அதன் செயற்பாடுகளை ஒரு காலநேர அட்டவணைக்குள் செயற்படுத்த வேண்டும்.
இலங்கையானது சர்வதேச மனிதா பிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்ட தாகக்கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக்கூறல் பொறி முறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் இவ்வாறு செய்ட் அல் ஹுசேன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்தவகையில் அரசாங்கத்துக்கு பாதகம் மற்றும் சாதகமான நிலையில் சர்வதேச நகர்வுகள் காணப்படுகின்றன. ஆனால் பாதிக் கப்பட்ட மக்களை பொறுத்தவரை இதுவரை நீதி கிடைக்காத அல்லது தாமதமடைகின்ற நிலையே நீடிக்கின்றது.
சர்வதேச மட்டத்தில் இலங்கை மீதான ஆதரிப்பு போக்கில் படிப்படியாக மாற்ற ங்கள் வருவதாக கூறப்பட்டபோதிலும் அவை பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதியாக அமைகின்றனவா என்பதே இங்கு முக்கி ய மாகும். ஆனால் தற்போதைய நிலைமையில் சர்வதேசத்தின் போக்கை கண்டு அரசா ங்கம் விழித்துக்கொள்ளவேண்டியது அவசியமா கும்.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காமல் அரசாங்கம் இழுத்தடிக்கும் நிலைமையை கடைப்பிடிக்குமானால் அது மேலும் நெருக்குதல்களை கொண்டுவருவதாக அமைந்துவிடும். இலங்கையின் விவகாரம் தற்போதைய நிலைமையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு போகாவிடினும் ஆய்வாளர்கள் கூறும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அழுத்தங்கள் அதிகரிக்கலாம். எதிர்வரும் காலங்களில் அழுத்தங்கள் அதிகமாகவே வரலாம்.
எனவே அரசாங்கம் தற்போதைய நிலைமையில் விழித்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி விரைவாக நடவடிக்கைகளை எடுக்கின்றதா என்று பார்ப்போம்.
ரொபட் அன்டனி