தொண்டமான் பெயரை நீக்கியதை எதிர்த்து மறியல்
27 Oct,2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிறுவனரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் அமைந்த அரசு சார்ந்த அமைப்புகள், இடங்களின் பெயர்களில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
தலைநகர் கொழும்புவில் புறக்கோட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமை வகித்தார்.
"ஹட்டனில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், ரம்படவில் உள்ள கலாசார மண்டபம், நார்வுட்டில் உள்ள விளையாட்டு மைதானம் ஆகியவை சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் அமைந்திருந்தன. இவற்றின் பெயரை மாற்றவேண்டும் என்று இலங்கை அமைச்சரவை முடிவெடுத்ததை அடுத்து வியாழக்கிழமை தொண்டமான் பெயர் தாங்கிய இவற்றின் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டன.
இதை எதிர்த்து மலையகப் பகுதியில் பல ஊர்களில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து வெள்ளிக்கிழமை கொழும்புவில் சாலை மறியல் நடந்தது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் திருக்கேஸ் செல்லசாமி.
மறியல் போராட்டத்திலும் பங்கேற்ற திருக்கேஸ் மலையகத் தமிழ் அமைச்சர்கள் சிலரே அரசியல் காரணங்களுக்காக இதைச் செய்துள்ளதாகக் கூறினார்.
"சௌமியமூர்த்தி தொண்டமான் 40 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தவர். சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பழைய பாராளுமன்றக் கட்டடத்தில் தொண்டமான் சிலை அமைக்கப்பட்டது. தற்போது நீக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்தது அரசுதான்," என்றார் அவர்.
தொண்டமான் பெயரை நீக்க நினைப்போர் இன்னும் புதிய மண்டபங்களை, விளையாட்டு மைதானங்களை, கல்வி நிறுவனங்களைத் தொடங்கி விரும்பிய பெயர்களை வைக்கலாம். இருக்கும் தமிழர் தலைவர்கள் பெயர்களை அகற்றவேண்டியதில்லை. தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டுள்ள அந்த அமைப்புகளில் சிங்களப் பெயர்கள் வைக்கப்பட்டால் அதை மீண்டும் மாற்றும் வலிமை இங்கு யாருக்கும் இல்லை என்றார் திருக்கேஸ்.