சிறிலங்காவுக்கு வரும் அமெரிக்காவின் 6 நாசகாரி போர்க்கப்பல்கள்
23 Oct,2017
அமெரிக்க கடற்படையின் ஆறு நாசகாரிப் போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பல் ஒன்றுடன் இணைந்து, ஆறு நாசகாரிப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில்- எதிர்வரும் 28ஆம் நாளுக்கும் 31ஆம் நாளுக்கும் இடையில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் ஒருவாரகாலம் தங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருமா என்ற தகவல் இன்னமும் தெளிவாகவில்லை.
சிறிலங்காவுக்கு ஒரே நேரத்தில் அதிகளவு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது