ரத்னசார தேரருக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்
20 Oct,2017
சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த தேரர் அடையாள அணிவகுப்பொன்றுக்கும் உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிசையில் UNHCR அனுசரணையில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் கடந்த சில வாரங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேரர், நேற்று நிட்டம்புவயில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதன்போது தேரரிடமிருந்து இரு தேசிய அடையாள அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியிருந்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்னும் இருவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.