இலங்கையில் ரயில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம், ஸ்தம்பித்த ரயில் பயணங்கள்
12 Oct,2017
இலங்கையில் ரயில் ஓட்டுநர்கள் முன்னறிவிப்பின்றி நேற்று மாலை முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளன.
இதன் காரணமாக வழமையாக நாள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 360 ரயில் பயணங்கள் ரத்துச்செய்ய பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் பாதிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஓட்டுனர்களை சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான தகுதிகளை உயர்த்துவதற்கு ரயில்வே அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச்செய்யக் கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை ரயில்வே ஓட்டுனர்களின் சங்கத்தின் செயலாளர் ஜி.எம்.பி .பீரிஸ் தங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டமை காரணமாகவே இந்த போராட்டத்தை தொடங்கியதாக தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை இந்த போராட்டம் தொடருமென்றும் அவர் கூறினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும்
இலங்கை போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் டி.எஸ்.விதானகே கருத்து தெரிவித்த போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற் சங்கங்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி கண்டதாகவும் அவர்களது கோரிக்கைகள் குறித்து இன்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமென்றும் கூறினார்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக கொழும்பு ,கண்டி மற்றும் காலி உட்பட பல புகையிரத நிலையங்களில் பாதிக்கப்பட்ட பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வாக்குவாதங்களில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு குழப்ப நிலைகள் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விசேட போலீஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.