இரண்டு தசாப்தங்களின் பின்னர் தாயகத்தில் கால்பதித்த ஈழத்தமிழர்கள்!
12 Oct,2017
இந்தியாவின் தமிழக அகதி முகாம்களில் சுமார் இரண்டு தசாப்த காலமாக தங்கியிருந்த ஈழத் தமிழர்களில் ஒரு தொகுதியினர், இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையிலும், இலங்கை புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டிலும் 19 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டிருந்த அதாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 25 வருடங்களுக்கு முன்னர், மன்னார் பகுதியிலிருந்து இம்மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். தற்போது நாடு திரும்பியுள்ள இம் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்துள்ள அதேவேளை, புனர்வாழ்வு அமைச்சும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
தமிழக அகதி முகாம்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் தங்கியுள்ள நிலையில், இலங்கையில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் இவர்கள் கட்டம் கட்டமாக நாடு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.