அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில், குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் எயார்பஸ் உடனான சிறிலங்கன் ஒப்பந்தம்
சிறிலங்கன் விமான நிறுவனம், பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை இதுவரை இரத்து செய்யப்படவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.
A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக இந்த உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்காலத்தில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த எட்டு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த அரசாங்கம், 2013 ஆம் ஆண்டு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதுடன், அவற்றில் 4 விமானங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாட்டை இரத்து செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்காக சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
சிறிலங்கன் விமான நிறுவனம் மற்றும் பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்திற்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, நான்கு A 350 – 900 ரக விமானங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
குறித்த விமானங்களைத் தயாரிப்பதற்காக, அரசாங்கம் ஏற்கனவே கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
விமானங்களின் தயாரிப்பை இரத்து செய்யுமாறு சிறிலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், அது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பிரான்ஸ் எயார்பஸ் உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கலந்துரையாடுவதற்கு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்கன் விமான நிறுவனம் கடந்த வருடம் 14.1 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியதுடன், கடந்த 9 வருடங்களில் 169 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கன் விமான நிறுவனத்தை மீள்கட்டமைப்பதற்கான புதிய அமைச்சரவைக் குழுவொன்றும் அரச அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன.