வாழைச்சேனை கடதாசி ஆலை 8 மாதங்களுக்குள் இயங்க நடவடிக்கை :
08 Oct,2017
வாழைச்சேனை கடதாசி ஆலையின் மீள் புனரமைப்பு செய்யவும் பழுதடைந்து காணப்படும் அதன் இயந்திரங்களை திருத்தம்செய்து தொழிலாளரின் பாவனைக்கு வழங்கவும் இந்திய எஸ்.வி.தொழிற்சாலையின் பொறியியலாளர் குழு சனிக்கிழமையன்று கடதாசி ஆலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இத் தொழிற்சாலையினை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் திருத்தம் செய்து மீண்டும் இயங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறியிலாளர் குழு இதன்போது கருத்து தெரிவித்தது.
இதனை திருத்தம் செய்வதன் மூலம் சுமார் 100 மெற்றிக் தொன் அளவிலான கடதாசிகளை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும். இதனால் இலங்கை ரூபாவில் ஒரு நாளைக்கு 30 இலட்சம் ரூபா பெறுமதியான காகிதங்கள் உற்பத்தி செய்யப்படும்.
இதன் காரணத்தினால் 2000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதரத்தினை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று இந்திய தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த பொறியிலாளர் குழுவின் தலைவர் எஸ்.பழனியாண்டி தெரிவித்தார்.
இதன்போது மேற்படி தொழிற்சாலையினை மீள் இயக்குவதற்கு முன்னின்று செயற்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவரின் ஆலோசகர் பாஸ்கரன், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர்களுக்கு இவ் முயற்சியினை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினையும் இதன் போது தெரிவித்தார்.