பாம்பு கடியால் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
01 Oct,2017
இலங்கையில் பாம்புக் கடியால் இறப்போர் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது
இலங்கையில் பாம்புக் கடி காரணமாக ஆண்டுதோறும் 400 பேர் வரை உயிரிழப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன்படி வருடமொன்றுக்கு பாம்புக் கடி காரணமாக 80,000 பேர்வரை பாதிக்கப்படுவதாகவும் அதில் 400 பேர் வரை மரணத்தை சந்திப்பதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களன மாதுவகே கருத்து தெரிவித்த போது முன்னர் பாம்புக் கடி காரணமாக வருடமொன்றுக்கு 40,000 பேர் வரை மாத்திரமே பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
ஆனால், தற்போது இந்த தொகை 80,000 பேர் வரை அதிகரித்துள்ளதாவும் இது பாரிய அதிகரிப்பென்று அவர் கூறினார்.
கிராமிய பகுதிகளில் வசிக்கும் மக்களே பாரிய அளவில் பாம்புக் கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அதிலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கூடுதலாக பாம்புக் கடிகளுக்கு ஆளாகின்றதாக கூறிய பேராசிரியர் களன மாதுவகே பாம்புக் கடி ஏற்பட்டதுடன் சிகிச்சை பெற தாமதம் ஏற்படுத்துவதன் காரணமாக பெரும் எண்ணிக்கையில் இறப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.
பாம்புக் கடி ஏற்பட்டதுடன் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் எமது மக்கள் தாமதம் காண்பித்து வருவதாகவும் இதன் மூலம் விஷம் உடல் முழுவதும் பரவுவதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே பாம்புக் கடி ஏற்பட்டதுடன் பாதிக்கப்பட்ட நபரை தகுந்த சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இது குறித்து பொது மக்களை தெளிவு படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் வேண்டுகோள் விடுத்தார்.