நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர்
28 Sep,2017
அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.
சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இவருக்கு இந்தப் பரிசை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன். சிரியாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பான வெள்ளை தலைக்கவசம் அமைப்பின் ராட் அல் சாலே, அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம், சூசன் என்.ஹேர்மன் ஜீன், நகச் பன்யாரே, ஜெனெட் கஹின்டோ பிந்து, டெனிஸ் முக்வேஸ் ஆகியோரின் பெயர்களையும், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் பரிந்துரைப் பட்டியலில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது.