இலங்கை: ஆயுள் சிறைக் கைதிகளின் தண்டனையைத் தளர்த்தக் கோரிக்கை
21 Sep,2017
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் தண்டனைகளை மீளாய்வு செய்து அதனை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் சிறைக் கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் சேனக்க பெரேரா கருத்து தெரிவித்தபோது தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைத் தளர்த்துமாறு வலியுறுத்தி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இலங்கை சிறைச்சாலைகள் தொடர்பான சட்டத்தின் 08 வது பிரிவின் கீழ் ஒரு கைதிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை மீளாய்வு செய்து அதனை தளர்த்துவதற்கு சிறைச்சாலை தினைக்களத்துக்கு அதிகாரங்கள் இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால் அந்த சட்ட விதிமுறைகளை நடைமுறை படுத்துவதை சிறைச்சாலை திணைக்களம் மறுத்து வருவதாகக் குற்றம்சாட்டிய வழக்கறிஞர் பெரேரா இதன் காரணமாக கைதிகளுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் வரை குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அவர் இதன் மூலம் தற்போது சிறைச்சாலைகளுக்குள் காணப்படும் கைதிகளின் நெரிசலை குறைக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
எனவே ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளை மீளாய்வு செய்து சட்ட ரீதியாக கைதிகளுக்கு இச் சலுகையை பெற்றுக்கொடுக்குமாறு சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.