அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா
15 Sep,2017
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்.
இதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் சிறப்பு அறிவிப்பொன்றை விடுக்க வுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலை யிலேயே , அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார்.
இதற்கான பிள்ளையார் சுழியாகவே ‘அரச தலைவர் தந்தை’ என்ற நூலை பெருமெடுப்பில் வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
சத்துரிகா சிறிசேன இவ்வாறு முழுநேர அரசியலுக்குள் வந்த பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகளிர் துறையில் அவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2018இல் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் எனச் சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மாவட்ட தொகுதி அமைப்பாளரொருவர் தெரிவித்தார்.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் மாகாண சபைத் தேர்தல் ஊடாகவே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்தப் பாணியில்தான் சத்துரிகாவும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு வியூகம் வகுத்துள்ளார்.