அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும் – செந்தூரன்
26 Aug,2017
....................................
சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்ரீரெலோ இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அவர்களின் விடுதலை மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.
இருந்தும், அரசியல் கைதிகள் ஓரிருவரை விடுதலை செய்திருந்தாலும், அவர்களின் வழக்குகள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், அவ்வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுவதனை எதிர்த்து அரசியல் கைதிகள் மூவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருப்பதும், தமிழ் தலைமைகளின் வாக்குறுதிகளை நம்பி உண்ணாவிரதத்தினை கைவிடுவதும் வழக்கமாகிவிட்டது.
நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மிக விரைவில் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் விவகாரத்தில் உறுதியும், இறுதியுமான முடிவுகளை வழங்க வேண்டுமென்றும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.