முன்னாள் போராளிகளை கைது செய்ய அரசு திட்டம்?
22 Aug,2017
.................................
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
வழக்குகள் இழுத்தடிப்பு செய்கின்றமை, வேறு மாவட்டங்களுக்கு வழக்கை மாற்றும் முயற்சி என்பவற்றுக்கு எதிராக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் ஆர். திருவருள் ஆகியோரே நேற்றைய தினம் காலையிலிருந்து இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல், அரசியல் கைதிகளின் தண்டனைக் காலத்தை அதிகரிக்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாக தெரிவித்தார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அருட்தந்தை சத்திவேல், அண்மையில் வவுனியா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வை சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருப்பதன் அர்த்தம் முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்வதற்கு எடுக்கப்படும் ஆயத்தமா என்றும் சந்தேகம் எழுப்பினார்.