இலங்கையில் அனுமதியின்றி தங்கியதாக மூன்று தமிழர்கள் கைது
15 Aug,2017
.........................
இலங்கையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, இலங்கையின் பிரபல நாளேடான கொலம்போ பேஜ் வெளியிட்டுள்ள செய்தியில், ’இலங்கையில் உள்ள கடலோரப் பகுதியான மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் உரிய ஆவணங்களின்றி ரகசியமாக தங்கியுள்ளதாக கடலோரக் காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு போலீஸ் படையினருடன் அப்பகுதியை சோதனையிட்டபோது அங்குள்ள ஒரு வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேர் பிடிபட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து சம்மந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்ட மூவரும் 27,36,41 வயதுடையவர்கள் என விபரம் வெளியிட்டுள்ள அந்த நாளேடு, அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை