யாழ். துன்னாலையில் கைது செய்யப்பட்ட 42 பேரும் யார்?
10 Aug,2017
..............................
கடந்த இரண்டு நாட்களாக யாழ். குடாநாட்டில் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.குறிப்பாக யாழ். துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 42 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில், குறித்த 42 பேரினதும் உறவினர்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
துன்னாலை பகுதியில் இடம்பெற்ற அசம்பாவித செயற்பாடுகளுடன் தொடர்பில்லாதவர்களை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் கைது செய்துள்ளதாக தெரிவித்து இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி துன்னாலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், பொலிஸாரின் வாகனம் மீதும், பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற போது அந்த பகுதியில் இருந்தவர்களை கைது செய்ய முடியாத நிலையில், தமது உறவுகளை கைது செய்திருப்பதாக முறைப்பாடு செய்த தரப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.