பொலிஸார் ஆதாரமில்லாமல் எங்கள் பிள்ளைகளைக் கைது செய்கின்றனர் ; பெற்றோர் அச்சத்தில்
05 Aug,2017
llllllllllllllllllllll
பொலிஸார் ஆதாரமில்லாமல் எங்கள் பிள்ளைகளைக் கைது செய்கின்றனர். நாங்கள் பயத்தில் உறைந்து போயுள்ளோம். அதற்கெதிராக நடவடிக்கை எடுங்கள்” என்று வடமராட்சியைச் சேர்ந்த தாய்மார்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்தியக் கிளையில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
வடமராட்சியில் கடந்த சில தினங்களாகப் பொலிஸார் தொடர் தேடுதல் நடத்தி வருகின்றனர். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் 17 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக
அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நேற்று நேரடியாகச் சென்றுள்ளனர்.
பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜிடத்தில் தமது முறைப்பாட்டை வாய்மொழி மூலமாக அவர்கள் முன்வைத்துள்ளனர்.
“பொலிஸார் எந்தவித ஆதாரமுமின்றி எமது பிள்ளைகளைக் கைது செய்கின்றனர். தொடர்ந்தும் தேடுதல் நடத்தி வருகின்றனர். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். பொலிஸார் சும்மா எமது பிள்ளைகளைக் கைது செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என்று மக்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் விளக்கம் கேட்பதாக, பிராந்திய இணைப்பாளர்
த.கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.