..............................
இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த காய்ச்சல் பரவியுள்ளவர்களாக இனம் காணப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சிறுவர்களும் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.
இந்த ஆண்டு இதுவரை 90 ஆயிரத்து 865 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பதாக இனம் காணப்பட்டுள்ளனர். 269 பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவியோரில் இறந்தோர் விகிதம் 0.3 சதவீதம் என சுட்டிக்காட்டும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அவ்வாறு இறந்தோரில் 15 சதவீதமானோர் குழந்தைகளும் சிறுவர்களும் என தெரிய வருகிறது.
9 மாகாணங்களிலும் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கூடுதலான இறப்பு, அதாவது 136 இறப்புகள் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளன.
தென் மாகாணம் - 29 , சப்ரகமுவ மாகாணம் - 27 கிழக்கு மாகாணம் - 24 மத்திய மாகாணம் - 20 , வட மேல் மாகாணம் - 16 , வட மத்திய மாகாணம் -08 , ஊவா மாகாணம் -06 வட மாகாணம் - 03 என்ற எண்ணிக்கையில் ஏனைய மாகாணங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
பலியானவர்களில் 50 சதவீதத்தினர் 15 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், 35 சதவீதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் , 15 சதவீதத்தினர் 15 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இலங்கையில் பி.ரி.ஐ. பாக்டீரியாவை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை ஒழிப்பது வேறு பிரச்சினைகளை உருவாக்கலாம் என்பதால் இந்த பாக்டீரியாவை பயன்படுத்தி கொசுக்களை ஒழிப்பது சாத்தியப்படாது. எனவே, உலக சுகாதார அமைப்பின் சர்வதேச விதிகளுக்கு அமைய வேறு வழிகள் மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் " என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் 12 மாவட்டங்களில் தீவிர நிலை காணப்படுகிறது.
வீடுகளுக்கு உள்ளேயும் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கொழும்பு , கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் 38,508 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியதாக இனம் காணப்பட்டுள்ளதாக அந்த தகவல்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு . திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களை கொண்ட கிழக்கு மாகாணத்திலும் கணிசமான டெங்கு காய்ச்சல் பரவியோர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். இந்த மாகாணத்தில் 10 ஆயிரத்து 720 நோயாளிகள் வரை இனம்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 55 ஆயிரத்து 150 நோயாளிகளே இனம்காணப்பட்டிருந்தனர். 97 இறப்புகள் பதிவாகின.
இந்த ஆண்டு இதுவரை 91 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. 269 பேர் இறந்ததாக பதிவாகியுள்ளன நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் காணப்படுகின்றது.
சுகாதார அமைச்சு டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பாக வெளியிடும் தகவல்களில் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது. இதனை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.