இந்தியாவுடன் உடன்பாடு செய்ய இலங்கை அமைச்சரவை அனுமதி
26 Apr,2017
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பான அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டே, இலங்கை பிரதரமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருப்பதாக, இலங்கைவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இது ஒரு அரசியல் முடிவு என்றும், குறிப்பாக உடன்பாடு குறித்தோ, கூட்டு முயற்சி தொடர்பாகவோ எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பாக புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
அதேவேளை, திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில், தற்போது இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள 15 குதங்கள் தவிர, ஏனையவற்றில் 10 குதங்களை இலங்கை வைத்துக் கொள்வதற்கும், ஏனைய 74 குதங்களை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கும் இணக்கப்பாடு காணப்படவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புதுடெல்லிப் பயணத்தின் போது, பெற்றோலிய பணியாளர் தொழிற்சங்கங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் என்று நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை பிரதமரிடம் இலங்கை அதிபர் அறிவுறுத்தியதாக மற்றொரு செய்தி கூறுகிறது.